“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

நான் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை கையகப்படுத்த மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். சிதம்பரம் வேட்பாளர் தமிழ், புவனகிரி வேட்பாளர் சுமதி, காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் சிவஜோதி உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான்,

“நீண்ட நெடிய வரலாற்றுப் பேரிணத்தின் மக்கள் நாம். மொழி இல்லை என்றால் அந்த இனம் அழிந்து போகும் அவ்வாறு அழிந்து போகும் தமிழ் மொழியை எப்படி நாம் மீட்டெடுப்பது. பிஞ்சு குழந்தைகளை தெருவில் விளையாட அனுப்ப முடியாது. பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாது, ஏனென்றால் இரண்டு வயது குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்கிறார்கள். இந்த நாடே ஒரு குற்றச்சம்பவமாக மாறிப் போய்விட்டது.

இதை எல்லாரிடமிருந்தும் மாற்ற வேண்டும் என்பதற்காக உங்களிடமிருந்து உங்களுக்காக வந்த பிள்ளைகள். தொடர்ந்து இந்த களத்திலே போராடி வருகிறார்கள். தோல்வியை தவிர வேற எதுவுமே நீங்கள் தரவில்லை.
ஆனால் அதற்காக நாங்கள் தொவண்டு போகவில்லை. காரணம் தோற்கடித்தவர்கள் எங்களது பெற்றோர்கள் எங்களது மக்கள்.

எந்த மக்களை நாங்கள் நம்பி இருக்கிறோமோ, அவர்கள் முழுமையாக எங்களை நம்பவில்லை. எங்களிடம் காசு இல்லை, ஆக சிறந்த கருத்து இருந்தது. அதனால் தான் இந்த நிலத்தில் தீய அரசியலை எதிர்த்து போரை தொடுத்தோம். தடையற்ற மின்சாரத்தை ஒரு நொடி கூட தடையில்லாமல் உங்கள் மகன் உங்களுக்கு கொடுப்பேன். அதை இலவசமாக இல்லை உற்பத்திக்கு ஆகின்ற செலவை எடுத்துக் கொண்டு தருவோம். நாட்டின் வளர்ச்சிக்கு மின் உற்பத்தியில் மாற்று மின் பெருக்கத்தின் மூலம் தன்னிறைவை பெறும் புதிய கொள்கைகள் செயல்படுத்துவது அவசியம்.

மின்சாரம் இல்லாமல் நாட்டில் எந்த இயக்கமும் இல்லை. ஆபத்தான மின் உற்பத்திகளை எல்லாம் அரசு வைத்துக் கொள்கிறது. அணு உலை மின் உற்பத்தியில் அதிக ஆபத்து உள்ளது. வாழ்விடத்தை அனல் நிலையம் நாசமாக்குகின்றது. மாற்று மின் உற்பத்திக்கு வழிவகை இருக்கும் பொழுது அனல் மின் நிலையத்திற்கு அவசியம் இல்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதால் காற்று மாசுபடுகிறது. அனல் மின் நிலையத்தால் நீர் நஞ்சாகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த ஆபத்தான மூன்றையும் அரசு வைத்திருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத காற்றாலைத் தகடை அரசாங்கம் தனியாரிடம் கொடுத்துள்ளது. தமிழக அமைச்சர்களிடம் 4 லட்சம் கோடி, ஐந்து லட்சம் கோடி உள்ளது. காற்றாலை, மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் எந்தவித ஆபத்தும் இல்லை. இதனை தனியாரிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளது. இந்த திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து மின் உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் தடையற்ற மின்சாரம் எப்படி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் விடியோ மூலம் விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.