கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை – டெல்லி அரசு அறிவிப்பு!

டெல்லியில் உள்ள கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி விநியோக முறையை மேலும் வெளிப்படையானதாகவும் திறமையானதாகவும் மாற்றும் முயற்சியில், கிடங்குகளில் இருந்து நேரடியாக சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு டெல்லி அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs), தங்களது அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அதன்படி, இதுபோன்ற எந்தவொரு விற்பனையும் சட்டவிரோதமானது என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.

மேலும், நுகர்வோர் எளிதில் பெறுவதை எளிதாக்கும் வகையில், தேசிய தலைநகர் முழுவதும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் கிடைப்பதை அரசு விரிவுபடுத்தியுள்ளது. முகவரி சரிபார்ப்பு ஏதுமின்றி, செல்லுபடியாகும் அடையாள அட்டையைக் காண்பித்து முகமைகளில் இருந்து இந்த சிலிண்டர்களை வாங்கலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மேலும் உதவுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட HPCL விற்பனை நிலையங்களில் 11 பிரத்யேக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதையும், அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காக, விநியோகம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ரேகா குப்தா கூறினார். முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து சிலிண்டர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதால், எரிவாயு முகவர் நிலையங்கள் அல்லது சேமிப்புக் கிடங்குகளுக்குச் செல்வத்தையோ அல்லது கூட்டமாகக் கூடுவதையோ தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.