இரண்டு நாட்கள் பேருந்து இயக்கப்படும் என்பதால், தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் தினமும், 25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முன்பே இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்து. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினத்தில் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. திங்கள் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று மற்றும் நாளைய தினத்தில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அனுமதியைச் சாதகமாக வைத்துக்கொண்டு தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருப்பதால், போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.







