இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதற்கு, அரசியல் நிகழ்வுகள், மதம் தொடர்பான கூடுகையும் முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. 2019ம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவியது. கடந்த ஆண்டு இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கொரோனவின் முதல் அலையில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில், தொற்று பரவும் வேகமும், உயிரிழப்போரின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக உலக சுகாதார நிறுவனம், கூறுகையில் ‘ B.1.617 வகையின் முந்தைய வகை வைரஸ் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் இந்தியாவில் காணப்பட்டது. தற்போது இந்த வைரஸ் மீண்டும் எழுச்சிபெற்று பரவ தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ் மீண்டும் பரவுவதற்கு அரசியல் நிகழ்வுகளும், மதச்சார்பான கூடுகையும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் பொதுச் சுகாதாரம் தொடர்பான குறைவான புரிதலும் இதற்குக் காரணமாக இருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் 21% B.1.617.1 வகை வைரஸ் வகை பாதிப்பு. 7 % பரிசோதனைகள் B.1.617.2 வகை வைரஸ் பாதிப்பு. தினமும் புதிதாக வைரஸ் பாதிக்கும் சதவிகிதம் இந்தியாவில் அதிகரித்து உள்ளது. மேலும் தொற்றால் புதிதாக உயிரிழக்கும் சதவிகிதமும் அதிகரித்துள்ளது







