தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதிலும் தினந்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் தினமும் மரணமடைந்து வருகின்றனர். டெல்லி, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும் நீதிமன்றமும் இதற்கு அனுமதி வழங்கியது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளைக் கண்காணிக்கத் தனிக்குழு தமிழக அரசு தலைமையில் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து 35 டன் ஆக்சிஜன் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது 4.820 டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.







