ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் குளிர்நிலவி வருகிறது. இதனால் டோங்க் சவாய் மாதோபூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும் சேர்ந்த பாஜக தலைவருமான சுக்பீர் சிங் ஜௌனாபூரியா, நேற்று தொகுதி மக்களுக்கு போர்வை விநியோகம் செய்துள்ளார். அப்போது சுக்பீர் சிங் போர்வை பெற வந்திருந்த ஒரு பெண்ணிடம் அவரது பெயரை கேட்டுள்ளார்.
முஸ்லீம் பெண்ணான அவரும் தனது பெயரை கூறியதை கேட்ட சுக்பீர் சிங் அந்த பெண்மணிக்கு போர்வை வழங்க வேண்டாம் என்று தனது உதவியாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ”பிரதமர் மோடியின் பெயரை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு போர்வைகளை எடுக்க உரிமை இல்லை” எனவும் கூறினார். இதனால் போர்வைக்காக நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சுக்பீர் சிங் ”தான் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்றும் தான் தனிப்பட்ட முறையில் போர்வைகளை விநியோகித்ததாகவும், எந்த அரசாங்க நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சுக்பீர் சிங்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டோங்க் சவாய் மாதோபூரின் காங்கிரஸ் எம்பி ஹரிஷ் சந்திர மீனா, ”சுக்பீர் சிங்கின் நடத்தை கண்டிக்கத்தக்கது. நாட்டின் சமூகக் கட்டமைப்பை அழிக்கும் ஒரு எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது. ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களின் பெயர்களைக் கேட்டு போர்வைகளை விநியோகிப்பதும், அவர்களின் மதத்தைப் பொறுத்து போர்வைகளைத் திரும்பப் பெறுவதும் வெட்கக்கேடானது” என்று தனது எக்ச் பதில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் மாநில சட்டமன்றத்தில் ஒரு புயலை எழுப்ப வாய்ப்புள்ளதாக தெரிகிறது.







