இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள், மீனவர்களுக்கு இலங்கையால் ஏற்படும் இன்னல்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரத்தை குறித்த பிரச்சனைகளையும் எடுத்துரைத்தனர். மேலும், மீனவர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன் வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களுக்கு 5 கோடியே 66 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.








