கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் முதலமைச்சருடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்றும், காங்கிரஸ், திமுகவுடன் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.







