”சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
49 சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீண்டகாலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான உள்துறை செயலாளரின் கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டாக்டர் மனோகர், தமிழக
அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை, மேலும் தாமதம்
செய்வார் என குற்றம்சாட்டினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆளுநரின்
முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்பு முடிவு செய்யலாம் எனக் கூறி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29 ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.