டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி வீணானது. இந்த பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறையில் தளர்வு வழங்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பிப்ரவரி மாத்தில் அறுவடை செய்ய தாயாராக இருந்த சம்பா பயிர்கள் பரும் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 2 நாட்களாக பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்தனர்.
கடந்த காலங்களில் குறுவை பருவத்தில் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் மாநில கொள்முதல் முகமையான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளை தளர்த்த மத்திய அனுமதி அளித்துள்ளதை கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கு குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முதலமைச்சர் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.








