முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரீனா கடல் பகுதியில் தமிழக அரசு சார்பாக பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு புதிய தமிழகம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் தெரிவித்ததாவது..
“சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக தமிழக அரசு நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. அது மக்களின் வரிபணம் இந்த முடிவை புதிய தமிழகம் கட்சி ஒருபோதும் ஏற்காது. மக்கள் அதனை தீவிரமாக எதிர்ப்பார்கள். புதிய தமிழகம் கட்சி இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான
நிதி குறைத்துள்ளது. அதனை அதிகப்படுத்த வேண்டும். புதிய வருமான வரி முறையில் 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் எந்தவிதமான வரி செலுத்த வேண்டியது இல்லை என்று கூறினாலும் 7 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் ஈட்டினால் முழுமையாக வரி செலுத்த வேண்டி உள்ளது. அதனை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதானி குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக அன்னிய முதலீடு குறையும், இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் அதனை மத்திய அரசு சரி செய்ய வேண்டும்.” என கிருஷ்ண சாமி தெரிவித்தார்.
– யாழன்







