கண்ணதாசன் – எம்எஸ் விஸ்வநாதன், வாலி – விஸ்வநாதன் கூட்டணி மாறி மாறி கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம். யார் எழுதிய பாட்டு இது என மக்கள் மயங்கி நின்ற நிலையில், கண்ணதாசனா, வாலியா என பட்டிமன்றம் நடக்காத குறையாக பாடல்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஒருகட்டத்தில் எம்ஜிஆருக்காக மன்னாதி மன்னனில் அச்சம் என்பது மடமையடா என பொங்கு தமிழில் கண்ணதாசன் எழுதி, டிஎம்எஸ் பாடிய பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இந்தப் பாடலை ஒலிபரப்ப இலங்கை வானொலி தடை செய்தது.
அஞ்சாமை திராவிடர் உடைமையடா…என்ற வரிகளுக்காக பாடல் தடை செய்யப்பட்டது.
கண்ணதாசன் அப்படி எழுதினால் காக்கும் கரங்கள் திரைப்படத்திற்காக ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக என கவிஞர் வாலி தன் பங்குக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட பாடல்களை எழுதி மயங்க வைத்தார். விரசமில்லாத காதல் பாடலுக்கு அந்தக்கால ஜோடியான எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி இணையில் வந்து மெய்மறக்க வைத்தது.
கவிஞர்களுக்கே உரிய செருக்கு ஏதுமின்றி ஆரோக்கியமாக திரையுலகம் சென்று கொண்டிருந்ததால், திகட்டாத தெள்ளு தமிழ் பாடல்கள் ரசிகர்களுக்கும் கிடைத்த வண்ணம் இருந்தன. அப்படி ஒரு காலகட்டத்தில் சிவாஜி நடித்த பச்சை விளக்கு திரைப்படத்திற்காக விஸ்வநாதன் மெட்டுபோட, அதற்கேற்றார்போல், பொன்மலர்ச்செண்டு முகமாக, இருவண்டு விழியாக, உருக்கொண்ட திருமாது மீனாட்சியே… என வரிகளை எழுதினார் கண்ணதாசன்.
ஆனால் இவ்வளவு நீள பல்லவி இருந்தால், ரசிக்காது, வேண்டாம் என கூறிவிட்டார் தயாரிப்பாளருக்கு ஆலோசகராக இருந்த ஏ.வி. மெய்யப்பன், இதையடுத்து தூது செல்ல ஒரு தோழி இல்லை என பாடலை எழுதினார் கண்ணதாசன்.
ஆனாலும் கண்ணதாசனுக்கு தனது பல்லவி மீது தீராக்காதல், மீண்டும் ஒருமுறை மெட்டுப்போட முயன்ற விசுவநாதனிடம் புது மெட்டுப் போட வேண்டாம் அந்த பழைய மெட்டை போடு எனச்சொல்ல, விசுவநாதனோ..அண்ணே.. அந்த மெட்டுக்கு வாலி பாட்டு எழுதிட்டாரு என சொல்ல பாட்டை போடு என கவியரசு கூற, மையேந்தும் விழியாட என்ற பாடலை கேட்டு மகிழ்ந்த கண்ணதாசன், வாலியை பாராட்டினார். செருக்கை மறந்து சிந்தனையை வளர்த்த மாபெரும் கவிஞர்களின் அந்தக் காலத்தை, மறந்ததே நெஞ்சம் என சொல்லத் தோன்றுகிறதா.









