டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

காற்றுமாசு காரணமாக தலைநகர் டெல்லியில், முழு பொது முடக்கத்தை அமல் படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில்…

காற்றுமாசு காரணமாக தலைநகர் டெல்லியில், முழு பொது முடக்கத்தை அமல் படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி என் வி ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக, முழு பொது முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால், அண்டை மாநிலங்களில் உள்ள என்சிஆர் பகுதிகளில் அதுபோன்று தடை விதிக்கப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்று டெல்லி அரசு தெரிவித்தது.

காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும்போது டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தடை விதிக்கலாம் என்றும், வாகன நிறுத்தும் கட்டணங்களை நான்கு மடங்கு வரை உயர்த்தலாம் என்றும், மெட்ரோ சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் டெல்லி அரசு சார்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

பொது இடங்களில் குப்பை கழிவுகளை எரிப்பதை தடுப்பது, கட்டுமானங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் டெல்லி அரசு தெரிவித்தது. இதையடுத்து, காற்று மாசுபாட்டை குறைக்க இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என நீதிபதிகள் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தேவையற்ற வாகன போக்குவரத்தை தடுப்பது, கட்டுமான பணிகளை நிறுத்துவது, பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பது, ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக 24 மணிநேரத்திற்குள் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

டெல்லி காற்று மாசு தொடர்பாக டெல்லி பஞ்சாப், ஹரியானா உத்தரப்பிரதேச மாநில அரசுகளின் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்டி, காற்று மாசை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.