தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளுக்கான நேரம், நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவி வரும் சூழலில், கொரோனா நிவாரணம் மற்றும் மாதாந்திர பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏதுவாக நியாய விலைக் கடைகள், காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்பட்டு வந்தது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு நேரங்களிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9மணி முதல் 12:30மணி வரையிலும், பிற்பகல் 2மணி முதல் 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் எனவும், மறு உத்தரவு வரும் வரையில் இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 பொருட்கள் தொகுப்பு, ஜூன் 15 ஆம் தேதி முதல் விநியோகம் செய்ய ஏதுவாக, ஜூன் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பணியாளர்கள், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பிற்பகலில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும், முற்பகல் வழக்கம் போல் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.







