30.9 C
Chennai
May 7, 2024
செய்திகள்

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில்
சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 1,51,990 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு
தொடங்கவிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வுக்கு உட்படுத்தாத அண்ணா பல்கலைக்கழகம், அண்மையில் அனைத்துக் கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்தது. அதில், 225 பொறியியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவை கண்டறியப்பட்டதால், 2 வார கால அவகாசத்துக்குள் அவற்றை சரிசெய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே, பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து வரும் மாணவர்களின் வசதிக்காக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதி உட்பட அனைத்து வகை அம்சங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் கல்லூரிகளின் பெயர், தரவரிசை, 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் அந்த கல்லூரியின் கட் -ஆப் மதிப்பெண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் 481 கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியும் ( CEG ), 2-வது இடத்தை குரோம்பேட்டை MIT கல்லூரியும், 3-வது இடத்தை கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும் பெற்றுள்ளன.

தொடர்ந்து, செங்கல்பட்டு காலவாக்கத்தில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார்
பொறியியல் கல்லூரி 4-வது இடத்தையும், 5-வது இடத்தை கோவையில் உள்ள
கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனமும், 6 முதல் 10 வரையிலான இடங்களை முறையே மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை நீலாம்பூர் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காஞ்சீபுரம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியும் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை அரியலூரில் உள்ள கே.கே.சி. தொழில்நுட்பக் கல்லூரி பெற்றிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் இந்த தரவரிசைப் பட்டியல் நடப்பு
ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று உயர் கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading