தமிழ்நாடு நாள் : தமிழ் மக்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

தமிழ்நாடு நாளில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பும், தொழில்துறை வளர்ச்சிநிறைந்த ‘வளர்ந்த தமிழகம்’ படைக்க உறுதியேற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

தமிழ்நாடு நாள் என்பது மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்படி, தமிழ் பேசும் பகுதிகளை உள்ளடக்கிய தனி மாநிலம் உருவானதை நினைவுகூரும் சிறப்பு நாளாகும். இந்நாளில் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவக்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உலகெங்கும் பரவி வாழும் என் அன்புக்குரிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, நமது தாய்த் தமிழகம் தனித்துவமான நிலப்பரப்பைப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில், தமிழகத்தின் எல்லைகளைக் காக்கப் போராடிய தியாகசீலர்களை நினைவுகூர்ந்து போற்றுவது நமது தலையாய கடமையாகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உன்னத தத்துவத்தை உலகிற்கு அளித்த தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்கள், ஆன்மிக நெறி புகட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்கள், உலகப் பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் என ஆன்மிகமும் வீரமும் அறிவும் தழைத்தோங்கிய புண்ணிய பூமி நமது தமிழ்நாடு.

அத்தகைய நமது தமிழ்நாட்டின் கலாச்சார வேர்களையும் ஆன்மிக அடையாளங்களையும் காப்பதுடன் நின்றுவிடாமல், தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினருக்கு வளமான நாளைய தினத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து, பெண்களின் பாதுகாப்பும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும், சமச்சீரான தொழில்துறை வளர்ச்சியும் நிறைந்த ‘வளர்ந்த தமிழகம்’ (Viksit Tamil Nadu) படைக்க இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.