ராமநாதபுரத்தில் குடிநீருக்காக, உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி சென்று குடிநீர் எடுத்து வரும் கிராம மக்களின் அவலநிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்காத்தி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கண்மாயின் நடுவில் உள்ள திறந்தவெளிக் கிணறு, மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
கண்மாயில் தண்ணீர் இல்லாத காலங்களில் கிராம மக்கள் நடந்து சென்று கிணற்று ஊற்று நீரை இறைத்து வருவது வழக்கம். நடப்பாண்டு பெய்த கனமழையால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கிராம இளைஞர்களின் உதவியோடு கண்மாய் நடுவே உள்ள கிணற்றில், ஆபத்தை உணராமல் நீந்தி சென்று, உயிரை பணயம் வைத்து மக்கள் குடிநீரை எடுத்து வருகின்றனர். எனவே, காவிரி கூட்டுக்குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதி இல்லாததால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கிணற்றுக்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







