ராமதாஸ் தரப்பு பாமகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. அதனால் இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாக இயங்குகின்றனர்.  அன்புமணி ராமதாஸ் தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். பதிலுக்கு ராமதாஸ் நடந்த சிறப்பு பொதுக்குழுவை கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்ந்த்டுத்தனர். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, “அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. என்றும் தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தை, பாமகவின் தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள்தான் பாமகவின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார். இதற்கு ராமதாச் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் ராமதாஸ் தரப்பு பாமகவினர் எம்.இல்.ஏ அருள், பொதுச் செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர் டாக்டர் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து புகாரளித்தனர்.

அப்புகாரில், தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவிற்கு கட்சியின் சின்னம், அங்கீகாரத்தை ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல. நாங்கள் பல்வேறு மனுக்கள் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு. அதைத் திரும்பப் பெற வேண்டும். உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.