மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ.!

கர்நாடக மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளதாக தகவல் வெளியாகி அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அவருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையாக நன்றி தெரிவித்துள்ளார்.…

கர்நாடக மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளதாக தகவல் வெளியாகி அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அவருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையாக நன்றி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  பல மாநிலங்களில் ஒரு மனதாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மாறாக அதிகமானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மாநிலங்களுக்கு மட்டும் இன்று ராஜ்யசபா தேர்தல் நடந்தது.  அந்த வகையில்கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,  காங்கிரஸ் கட்சியின் நசீர் உசேன்,  ஜிசி சந்திரசேகர்,  ஹனுமந்தய்யா ஆகியோரின் இவர்களது பதவி காலம் ஏப்ரல் மாதம் 2ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து அந்த 4 காலியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொருளாளரான அஜய் மக்கான்,  நசீர் உசேன்,  ஜிசி சந்திரசேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ தேபோல் பாஜக சார்பில் நாராயண பாண்டகே மனுத்தாக்கல் செய்தார்.  மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டியும் ஜேடிஎஸ் சார்பிலும் மனுத்தாக்கல் செய்தார்.  இதனால் 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டனர்.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் 45 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தால் ஒருவர் ராஜ்யசபா எம்பியாக முடியும்.  அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர்.  அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  பாஜகவுக்கு 66 எம்எல்ஏக்கள் உள்ளனர்.  இதனால் அந்த கட்சியின் வேட்பாளரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சி புதிய திட்டமிட்டுள்ளது.  அதாவது ஜேடிஎஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளன.  மாறாக பாஜகவின் மீதமுள்ள 21 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறும் முனைப்பில் ஜேடிஎஸ் கட்சி திட்டமிட்டது.

மேலும் ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது . இத்தகைய சூழலில் தான் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று காலையில் கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தல் தொடங்கியது.  கட்சி எம்எல்ஏக்கள் மொ்ததமாக வந்து ஓட்டளித்தனர்.  கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என்று அந்தந்த கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் தான் பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ எஸ்டி சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளதாக கூறப்படுகிறது.  அவர் பாஜகவின் கொறடா தொட்டண்கவுடா ஜி பாட்டீலின் உத்தரவை மீறி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்துள்ளார்.  இதுபற்றி தொட்டண்கவுடா ஜி பாட்டீல் கூறுகையில், ‛‛எஸ்டி சோமசேகர் கட்சி மாறி ஓட்டளித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் அவர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்து வருகிறோம்” என்றார்.

இதற்கிடையே தான் எஸ்டி சோமசேகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா (காங்கிரஸ்) நன்றி தெரிவித்துள்ளார்.  அதாவது கட்சி மாறி ஓட்டளித்தற்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.  இதனால் எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.  கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டளித்துள்ள எஸ்டி சோமசேகர் பெங்களூர் யஷ்வந்தபுரம் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.  இவர் 2013 முதல் தொடர்ந்து அந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.  இவர் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.  அதாவது கடந்த 2013, 2018 சட்டசபை தேர்தல்களின்போது எஸ்டி சோமசேகர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  சித்தராமையாவின் ஆதரவாளராக அறியப்பட்ட இவர் அதன்பிறகு காங்கிரஸில் இருந்து விலகினார்.

அதாவது 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில் 15க்கும் அதிகமானவர்கள் பாஜகவுக்கு தாவினர்.  அதில் ஒருவராக எஸ்டி சோமசேகரும் இருந்தார்.  அதன்பிறகு பாஜக சார்பில் யஷ்வந்தபுரம் தொகுதிக்கு2019 ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.  அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார்.  தற்போது அவர் பாஜகவில் அதிருப்தியில் இருப்பதாகவும்,  விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இத்தகைய சூழலில் தான் இன்றைய ராஜ்யசபா தேர்தலில் அவர் கட்சி மாறி ஓட்டளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.