இந்திய-சீன எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் சரத்பவார், ஏ.கே.அந்தோணி ஆகியோரிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோரிக்கை விடுக்கும் என தெரிகிறது. மேலும் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சருமான சரத்பவார், பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.
இந்தசந்திப்பின் போது ராணுவ தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நாராவானே ஆகியோரும் உடன் இருந்தனர்.
எல்லையில் நிலவும் தற்போதைய சூழல்கள் குறித்து, பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர்களிடம் ராஜ்நாத் சிங் எடுத்துக்கூறியதாக தெரிகிறது. சீனாவை எதிர்கொள்ள எல்லையில் இந்திய ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியும், முப்படைகளின் தளபதியும் முன்னாள் அமைச்சர்களிடம் எடுத்துக் கூடியதாக கூறப்படுகிறது.