ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு, 2 மாதம் பரோல் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தனது மகனுக்கு 2 மாதங்கள் சாதாரண பரோல் விடுப்பு வழங்க மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம் இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரவிசந்திரனுக்கு விடுப்பு வழங்க தகுதிகாண் அலுவலர் பரிந்துரை செய்யவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் சாதாரண விடுப்பு வழங்க இயலாது என்றும், தேர்தல் சூழலில் அவருக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தாயாரின் கண் அறுவை சிகிச்சைக்காக விடுப்பு கோரிய மனுவும், இதே காரணத்தை முன்னிட்டே நிராகரிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த மனு குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







