நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி
சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய
நிலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உட்பட 5
காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு
மாற்றி உத்தரவிடப்பட்டது.
மேலும், ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை வீடியோ வழங்கினால் மட்டுமே ராஜசேகரின் உடலை வாங்குவோம் என அவரது தாயார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. காவல்துறை தாக்கியதால் ராஜசேகர் இறக்கவில்லை என கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். மேலும், ராஜசேகரின் பிரேதப் பரிசோதனை வீடியோ ராஜசேகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்த ராஜசேகரின்
உடலை பெற்றுக் கொள்ள ராஜசேகரின் தாயார் உஷா ராணி, குடும்பத்தினர் மற்றும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர்
உள்ளிட்டோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர், உடலை
பெறுவதற்கான சான்றிதழில் ராஜசேகரின் தாயார் கையெழுத்திட்டார்
பட்டியலினத்தோர் பிரிவுக்கு பதிலாக வேறு பிரிவு ராஜசேகரின் இறப்புச் சான்றிதழில்
மாற்றி இருப்பதாக காவல் துறையிடம் ராஜசேகரின் தாயார் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, மேஜிஸ்ட்ரேட் லட்சுமி பட்டியலினத்தோர் பிரிவு என மாற்றித் தருவதாக
கூறியதால் ராஜசேகரின் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு
ராஜசேகரின் உடலை சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதிக்கு கொண்டு சென்றனர்.
ராஜசேகரின் பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை எனவும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சில்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, ராஜசேகர் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்குச் சென்றும் விசாரணை செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா








