தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் சென்றார். அங்கு, அருணாசலேஸ்வரர் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், அமித் ஷா அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அங்கிருந்து மத்திய அமைச்சர், காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா இன்று (ஆக. 9) கோரிமேடு காவலர் திடலில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காவல் துறையினரின் பலத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியரசு தலைவரின் வண்ணக் கொடி விருதை புதுச்சேரி காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங்கிடம் வழங்கினார்.




