நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
மும்பையின் புறநகர் பகுதியான பைதோனி காவல் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் போலீஸ் வசம் உள்ளது. நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக அவருக்கு எதிராக தானே காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
நுபுர் சர்மாவுக்கு ஏற்கனே மின்னஞ்சல் வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நேரடியாகவும் சம்மனை வழங்க போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.
நுபுர் சர்மாவுக்கு எதிராக ரஸா அகாடெமி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகாராஷ்டிர போலீஸார் நுபுர் சர்மாவிடம் சம்மன் அளிக்க முயற்சி செய்து வருகின்றனர். எனினும், எங்கள் மாநில போலீஸாருக்கு டெல்லி போலீஸார் ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர்” என்றார்.
முன்னதாக, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இவரது கருத்து ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த மற்றொரு செய்தித்தொடர்பாளர் நவீன் ஜிண்டால் என்பவருக்கு டுவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த 2 பேரின் கருத்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு முஸ்லிம் நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம், நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கிய பாஜக, நுபுர் சர்மாவை பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
-மணிகண்டன்








