முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவு
தமிழக கேரள எல்லைப் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் கேரளாவிற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தேனி ,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின்…
தமிழக கேரள எல்லைப் பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் கேரளாவிற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
தேனி ,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லைப்பெரியாறு அணை.தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்த அணை 152 அடி உயரம் கொண்டது.142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
பருவ காலத்திற்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயித்துக் கொள்ளும் ரூல்கர்வ் விதிப்படி நேற்று முன்தினம் முதல் 137.5 வரை அணையில் நீர் தேக்கிக்கொள்ளலாம் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 138.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியாகவும் இருந்தது. தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,194 கன அடியாகவும், கேரள பகுதிக்கு வினாடிக்கு 5986 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கியது.அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 138.50 அடியாகக் குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 5,073 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 2,194 கன அடி மற்றும் கேரள பகுதிக்கு 2,879 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால் லோயர்கேம்ப்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.தண்ணீர் குறைந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுகிறது.







