தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்!

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் 1.5…

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடி – மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். காரைக்கால், தருமபுரி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளார்.

மேலும், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில், இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும், புவியரசன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.