வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
சென்னையில், விடிய விடிய கொட்டிய கனமழையால், அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்றுடன் கொட்டிய மழை காரணமாக, நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது.
பலத்த மழை காரணமாக மேற்கு மாம்பலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர். இதேபோன்று புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் பகுதிகளில் கனமழை கொட்டியது.
அதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மல்லியன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஓரடியம்புலம் கிராமத்தில் கரை 20 அடி தூரத்திற்கு உடைந்து, சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், ஓரடியம்புலம், வாட்டாகுடி, உம்பளச்சேரி, சாக்கை, ஆய்மூர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளான வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பிபட்டி, கான்சாபுரம், கூமாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.







