Rain Alert | மதியம் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (டிச.17) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நாளை (டிச.18) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, டிச.19முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. டிச.22 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.