ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த விவகாரம்: ஊழியர் வாக்குமூலம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்த ரயில்வே ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில் மர்ம நபர்கள் தன்னைக் கட்டிப்போட்டுவிட்டு 1,32,000 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றதாக ரயில்வே ஊழியர் டீக்கா ராம் மீனா புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சமயத்தில் டீக்கா ராமின் மனைவி ரயில் நிலையத்திற்குள் சென்றது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில், ஊழியர் டீக்கா ராம் மீனா, தனது மனைவி உதவியுடன் தன்னை கயிற்றால் கட்டிப்போடவைத்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது அம்பலமானது. அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்ட போலீசார், டீக்கா ராம் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியை கைது செய்தனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடன் அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே டிஐஜி ஜெயகௌரி, ரயில் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சியை வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறினார். ரயில்வே ஊழியர் டீக்கா ராம், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததாகவும், இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக டிஐஜி ஜெயகௌரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.