ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல்காந்தி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை சந்தித்து பேசினார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரும்,  பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்,  மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.  முன்னணி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை சந்தித்து பேசினார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரும்,  பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்,  மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.  முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து தொடர் போராட்டங்களால் பிரிஜ் பூஷன் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

இதில் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பராவார்.  இதனால் அவரது தேர்வுக்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சிங்கின் ஆதரவாளர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:  ‘திடீரென’ கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!

மேலும், மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.  தொடர்ந்து, காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவ் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.  இதே போல்,  மத்திய அரசின் விருதுகளை திருப்பி அளிப்பதாக பிரபல வீராங்கனை வினேஜ் போகத்தும் அறிவித்தார்.

இந்த நிலையில்,  ஹரியானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,  ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் பயிற்சி கூடத்துக்கு சென்றார்.  ராகுல் காந்தி அங்கு பயிற்சி பெறும் மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பஜ்ரங் புனியாவும் உடனிருந்தார்.  இதுகுறித்து பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம்  கூறுகையில்,  “மல்யுத்த வீரர்களின் வழக்கமான பயிற்சியை காண ராகுல் காந்தி வருகை தந்தார்.  அவரும் மல்யுத்தம் செய்தார்.” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.