வேலூர் மருத்துவ கல்லூரி ராகிங் வழக்கில், கல்லூரி நிர்வாகம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், அம்மாணவர்கள் மீது தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சிஎம்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராகிங் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், ராகிங்கை தடுக்க கல்லூரியில் 24 மணி நேர பாதுகாப்பும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர் விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் கவனிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கல்லூரி அறிக்கையை ஏற்று தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கை முடித்து வைத்தது.








