பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் க.விக்னேஷ்!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் 717 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடுவது குறித்து இன்று ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் 11.05.2026 அன்று கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் இன்று தமிழ்நாடு மாநில வாணிப கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்கள் அவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மீள பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் (டாஸ்மாக்) மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.