கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மாயமானதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இரவு 10 மணிக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 தனிப்படைகள் விசாரணையில் ஈடுபட்டன. சிசிடிவியை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டில் இருந்த கார்த்தி சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளான். கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்தபோது தப்பியோடியதில் வலது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணையில் கார்த்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் மோகன் முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரிய வந்தது. சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமை என்பதால் போக்சோ வழக்கு பதிவு செய்யபட்டது. குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை. குற்றவாளியை விரைந்து கைது செய்ததுபோல், குற்றப் பத்திரிகை விரைவாக தயாரிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.







