ஆர் ஏ புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் துறைரீதியான அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்க கோரிக்கை வைப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிராகஷ் கூறினார்.
‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஐங்கரன்’. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்து நடித்துள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம், பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் 12ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இதுகுறித்து ஜிவி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரவி அரசு உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜிவி.பிரகாஷ், நான்கு வருட கடும் உழைப்பிற்கு பிறகு இப்படம் வெளியாக உள்ளது. மீடியாவின் ஆதரவுக்கு நன்றி. திறமையானவர்களை ஊக்குவிக்கும் படமாக இது இருக்கும். இப்படத்தின் கலை இயக்குனருக்கு நிச்சயமாக நிறைய விருதுகள் கிடைக்கும்.
சமூக கருத்துள்ள அதிரடி படத்தில் இப்போதுதான் முதல்முதலாக நடித்துள்ளேன். புதிய கண்டுபிடிப்பாளர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும் என்பது தான் இந்த படம் சொல்ல வருவது. ஆர் ஏ புரம் ஆக்கிரமிப்பு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். இதுதொடர்பாக துறைரீதியான அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க கோரிக்கை வைப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் ரவி அரசு, இன்னும் இருபது ஆண்டுகளில் பேட்டர்ன் ரைட்ஸ்கான வழக்குகள் தான் அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் இளம் திறமையானவர்களுக்கு போதுமான தகவல்கள் இங்கு இல்லை. இதற்கு பெற்றோர்கள் குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்த அதனை ஊக்கப்படுத்த வேண்டும். இப்படத்தில் ஆழ்துளை கிணறு தொடர்பான காட்சி குறித்து அறம் படம் போல் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் இதன் கதையை 2014ம் ஆண்டே பதிவு செய்துவிட்டேன். தற்போது வரை 200 திரையரங்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் படம் வெளியான பிறகு நிச்சயம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
Advertisement: