கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சி தனது மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக கையில் எடுத்த காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் இப்படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என விரும்பினால், அதனை யூ டியூப்பில் இலவசமாக வெளியிட வேண்டியதுதானே எனக் கூறியிருந்தார். மேலும், இதற்கு எதற்கு பாரதிய ஜனதா அரசு வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறது என காட்டமாக கேட்டிருந்தார். அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் என இரு வேறு விதமான கருத்துகள் வெளியாகின. அர்விந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை ஒவ்வொன்றும் மக்களிடையே வரவேற்பை பெறுகிறது. அவர் வளரும் வேகத்தை பார்த்தால் காங்கிரஸ் வாக்கு வங்கியை அவர் அள்ளிச்சென்று விடுவார் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது பாஜகவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவரின் வளர்ச்சி ஆரம்பத்தில் காங்கிரசிற்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் பாஜகவின் வாக்கு வங்கியிலும் கைவைக்ககூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்று பாஜக தலைமை கருதுவதாக தெரிகிறது. அதன் எதிரொலியாக அர்விந்த கெஜ்ரிவாலுக்கு செக் வைக்கும் விதமாக டெல்லியில் மத அரசியல் கையில் எடுத்துள்ளது பாஜக. அதற்காக, டெல்லியில் முகலாய மன்னர்களின் பெயர்கள் கொண்ட சாலைகளின் பெயரை மாற்ற வேண்டுமென டெல்லி மாநில பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மாநில பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி மற்றும் என்.டி.எம்.சியின் உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், டெல்லியில் உள்ள துக்ளக் சாலையை குரு கோவிந்த் சிங் சாலை என்றும், ஷாஜகான் சாலையை மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சாலை என்றும், ஹுமாயூன் சாலையை மகரிஷி வால்மீகி சாலை என்றும், அக்பர் சாலையை மகாராணா பிரதாப் சிங் சாலை என்றும், பாபர் சாலைக்கு சுதந்திர போராட்ட வீரர் குதிராம் போஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.இதுதொடர்பாக விரைவான முடிவை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் ஆதேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தை அர்விந்த் கெஜ்ரிவால் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. பாஜகவின் அழுத்ததிற்கு அடிபணிய போகிறாரா ? அல்லது வளர்ச்சியே எங்களது சிந்தாந்தம் என்ற பாணியை மேற்கொள்ளும் அவரது ஆம் ஆத்மி, அதே பாதையில் பயணிக்க போகிறதா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வேளை டெல்லி சாலைகளின் பெயர்களை மாற்ற முடியாது என்ற முடிவை அர்விந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டால், அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பாஜக முயலும் எனத்தெரிகிறது. காஷ்மீர் பைல்ஸ் படத்தை விமர்சித்த கெஜ்ரிவாலை வஞ்சம் தீர்க்க இதனை ஒரு வாய்ப்பாக பாஜக மாற்றும் எனத் தெரிகிறது. டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் மத துவேச அரசியல் என்றுமே வென்றதாக தேர்தல் வரலாறு இல்லை. இது காங்கிரசின் வாக்கு வங்கியை இரண்டாக உடைக்கும் முயற்சியே என்ற மற்றொரு பார்வையும் உள்ளது.
இராமானுஜம்.கி
Advertisement: