சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி கூடியது. அப்போது முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட 27 துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.

நேற்று மிலாடி நபியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் நடைபெற உள்ளது. காலை 9:30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் அது முடிந்ததும் சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.