நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் இருந்து போடே கோஷி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று காலை சுமார் 8:30 மணி அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
இந்த வெள்ளப்பெருக்கால் கோஷி ஆற்றின் ராசுவா, நுவாகாட், தாடிங் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராளமானோர் மாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியில் இருந்த 44 நேபாள ராணுவ வீரர்கள், பல்வேறு காவல் நிலையங்களில் பணியிலிருந்த 28 காவலர்கள் மற்றும் நேபாள ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 13 பேர் ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 60 ஊழியர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 391 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 93 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலாப் பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரையும் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
காரணம்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிச்சரிவு மற்றும் பனி ஏறி உடைப்பு காரணமாகப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என நேபாள வானிலை மையம் தெரிவித்துள்ளது.




