காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்கிற கேள்விகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் கை மேல் பலன் தருமா? என்பது குறித்து இப்போது…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்கிற கேள்விகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் கை மேல் பலன் தருமா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்…

வரும் 2024ம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு தேசிய கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டன. ஆளும் பாஜக கூடுதல் எண்ணிக்கையில் இடங்களைப் பெற அடித்தளம் அமைத்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மீண்டும் அடித்து ஆடவும் பாஜக தயாராகி வருகிறது. பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பாஜகவிற்கு எதிராக வலுவான அணியை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

2014ம் ஆண்டு முதல் ஆளும் கட்சி என்கிற தனிப்பலத்தோடு களத்திற்கு வரும் பா.ஜ.கவை வீழ்த்த வலிமையான கூட்டணியும் தலைமையும் கட்டாயத் தேவை என்கிற நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்பதே இன்னும் முடிவிற்கு வராமல் உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின்
அடுத்த தலைவர் யார்? என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வருகிறார் தலைவர் பதவியை சோனியா தவிர்க்கும் நிலையில் ராகுல் காந்தியும் விரும்பவில்லை. பிரியங்கா காந்தியும் வேண்டாம் என்கிறார். 

ராகுல் மறுப்பது ஏன்?

கட்சியில் எத்தனை தலைவர்கள் இருந்தாலும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த காந்தி ஒருவர்தான் கட்சிக்கு தலைவராக வேண்டும். குறிப்பாக சோனியா காந்தி தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும் என்கிறார்கள் மூத்த தலைவர்கள் சிலர். ஆனால், தொடர்ந்து தலைவர் பதவியை மறுத்து வருகிறார் ராகுல். கட்சியைப் பலப்படுத்தும் தன் முயற்சிக்கு மூத்த தலைவர்கள் பலர் ஒத்துழைக்கவில்லை என்பதால் ராகுல் அந்த பதவியை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

தகுதியான தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியிலா பஞ்சம்? என்று கூறி போர்க்குரல் எழுப்பிய 23 தலைவர்கள். தங்களில் ஒருவரை தலைவராக்க முயற்சிக்கின்றனர். முயற்சிகளுக்கிடையே கபில் சிபல் தொடங்கி குலாம் நபி ஆசாத் வரை ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகியும் வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு கட்சியை அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார்.

ஆனாலும் அதிருப்தி தலைவர்கள் சார்பில் சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறார் என்கிறார்கள். ஆனால், அதை சசிதரூர் உறுதிப்படுத்த மறுக்கிறார்.
தலைவர்களின் விலகல் குறித்து ராகுலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவற்றின் மூலம், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி, அழுத்தம் தருகிறது. ஆகையால், அச்சுறுத்தலுக்குப் பயந்து, பா.ஜ.கவிற்கு நண்பர்களாகி விடலாம் என்று காங்கிரஸ் இருந்து விலகிச் செல்கின்றனர்” என்றார்.

தலைவர் போட்டியில் யார்? யார்?

இந்நிலையில், சோனியா ஆதரவுடன் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ச்சுன கார்கே உள்ளிட்டோரில் ஒருவர் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படுவார் என்றும் வேறு சில தலைவர்களின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன என்கிறார்கள் ராகுல் ஆதரவாளர்கள். கட்சி மீண்டும் ‘பழைய காங்கிரசா வர வேண்டும் என்றால்’ ராகுல் காந்திதான் பதவி ஏற்க வேண்டும் என்று இப்போதும் சிலர் அவரை வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு அவர் இசைவு கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆகையால் ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர்தான் தலைவர் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் சில மூத்த தலைவர்கள்.போட்டி உறுதி என்றால் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 24 – 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையேதான் இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ம் தொடங்கி தொடர்கிறார் ராகுல் காந்தி.

தனது பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தலைவர் யார் என்பது தெரிந்து விடும். அதுவரைப் பொறுத்திருங்கள்” என்றார். தொடர்ந்து பேசிய ராகுல், ” தலைவர் பதவி குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். இந்த தெளிவுதான் பலரை குழப்பியுள்ளது. தலைவர் பதவியை ஏற்க மாட்டார். இல்லை மனம் மாறிவிட்டார் என மீண்டும் இருவேறு கருத்துகள் வருகின்றன.

ஒற்றுமைப் பயணம் தொடங்கிய மறு நாள், கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக்கை மத்திய பிரதேச மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவித்து, இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சோனியா ஆதரவு தலைவர் வேட்பாளர் என்கிற யூக பட்டியலில் முகுல் வாஸ்னிக் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இல்லை இது வழக்கமான நடவடிக்கைதான். ராகுல்தான் தலைவராவார் என்று இப்போதும் பலர் சொல்கிறார்கள் சிலர்.  தலைவர் தேர்தல் குறித்து ராகுல் விளக்கமளித்த அதே செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்து அசோக் கெலாட், “ராகுல் காந்திதான் தலைவராக வேண்டும் என்று பெரும்பான்மையானவர்கள் விரும்புகிறார்கள்.” என்றார்.

மேலும், “இது காங்கிரஸ் கட்சிக்கான பயணமில்லை. பிரிவினைவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்கான பயணம். மக்களுக்கான பயணம் என்றும் ராகுல் காந்தி அழுத்தமாக சொல்லியுள்ளார்.  அவரது இந்த பயணத்தின் மூலம்,
கோஷ்டிக்கு பெயர் பெற்ற காங்கிரஸில் ஒற்றுமை வருமா…? அல்லது புதிய கோஷ்டி உருவாகுமா?  வலிமையான தலைவராக ராகுல் காந்தியே வருவாரா…? கட்சி வலுப்பெறுமா?  பயணம் கை மேல் பலன் தருமா? என்பதெல்லாம் வரும் மாதங்களில் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துவிடும்.

ஜோ.மகேஸ்வரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.