முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8பேருக்கு உளவு பார்த்ததாக மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடற்படையில் செயல்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர்கள் மீது இஸ்ரேல் நாட்டிற்கு கத்தாரின் உளவு தகவல்களை வழங்கியதாக குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராகச் செயல்பட்ட கடற்படை அதிகாரி உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்கனாலஜிஸ் & கன்சல்டன்ஸி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்கள். இந்த நிறுவனம் கத்தாரின் ஆயுத படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கி வந்தது.
இந்த நிலையில் கத்தாரில் இஸ்ரேல் நாட்டுகாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கேப்டன் நவ்தேஜ் சிங்க் கில், வீரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஸ்ட், அமித் நாக்பால், புரந்தேடு திவாரி, சுகுணாகர் பகலா, சஞ்சீவ் குப்தா, ராகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் ஜாமீன் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்தான் கத்தார் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது..
“இந்தத் தீர்ப்பு குறித்து கேள்விப்பட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். முழுமையான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்துடனும் குழுவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். சட்ட ரீதியில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.







