முகமது பின் துக்ளக் போல ஆட்சி நடத்துகிறார் பிரதமர் மோடி – மம்தா பானர்ஜி விமர்சனம்

முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதற்கு…

முகமது பின் துக்ளக் போல பிரதமர் மோடி ஆட்சி செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதி பிரியா மாலிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு பாஜக அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி வருகிறது. கீழ்த்தரமான விளையாட்டை விளையாடி வருகிறது.

ஒரு பாஜக நிர்வாகி வீட்டிலாவது இதுவரை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளதா? அப்படி நடைபெற்று இருந்தால் அதுகுறித்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எல்லோருடைய வளர்ச்சிக்கான அரசு என்று பாஜக அரசு கூறிக் கொள்கிறது. ஆனால் எல்லோரையும் வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அரசாகவே மோடி தலைமையிலான பாஜக அரசு விளங்குகிறது.

இதையும் படியுங்கள் : சம உரிமை, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் வேலைநிறுத்தம் – ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கிய ஐஸ்லாந்து பிரதமர்!!

மாணவர்களின் பாடப்புத்தகங்களில் திடீரென இந்தியா என்ற பெயரை மாற்றச் சொல்வது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி முகமது பின் துக்ளக்கை போல ஆட்சி நடத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் மக்களை திண்டாட வைத்தவர், தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதாக மக்களை குழப்புகிறார். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை உருவாக்கியது ரவீந்திரநாத் தாகூர். ஆனால் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தைப் பெறும் பல்கலைக்கழகத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. சாந்திநிகேதனில் தாகூரின் பெயர் குறிப்பிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.