டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. 2016ம் ஆண்டு ரியோவி நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிலிச்ஃபெல்ட்டை இன்று எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 21-க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் பி.வி.சிந்து கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 2வது செட்டையும் 21க்கு 13 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றி எளிதில் வென்றார். இதன் மூலம், 2க்கு 0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற பிவி சிந்து, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதைப்போல ஹாக்கி ஆடவர் குரூப் சுற்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. முதல் பாதியில் இந்திய வீரர் வருண் குமார் கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அர்ஜெண்டினா அணி பதில் கோல் அடித்ததால் ஆட்டம் சமமானது. பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில், இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தது. இதனால், 3க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, மூன்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.







