தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் – உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..

தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புன்னைக்காயல் கிராமம் வழியாக செல்வதால், அப்பகுதி தனித்தீவு போல் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும், எனவே உதவி வேண்டி நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை…

தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புன்னைக்காயல் கிராமம் வழியாக செல்வதால், அப்பகுதி தனித்தீவு போல் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும், எனவே உதவி வேண்டி நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி வெள்ள நீர் புன்னக்காயல் பகுதியில் சென்று கடலில் கலக்கும் நிலை அங்கு உள்ளது. இதன்காரணமாக, அதிகப்படியான வெள்ளம் அவ்வழியே செல்வதால், புன்னக்காயல் மீனவ கிராமம் தனித்தீவு போல துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாகவும், அரசு சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டிய அவர்கள் தங்களுக்கான உதவிகளை கோரி நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.