பஞ்சாபில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் தேனி மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், பதிண்டா ராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று மற்ற வீரர்கள் பார்த்தபோது, 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பதிண்டா ராணுவ முகாம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதையும் படியுங்கள் : பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி சூளுரை
ராணுவ அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரில், இரண்டு பேர் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் குமார், சேலம் மாவட்டம் பெரிய வனவாசி சாணார்பட்டியை சேர்ந்த கமலேஷ் ஆகிய இரு தமிழர்கள்தான் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திய ராணுவத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு, பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் யோகேஷ் குமார் மற்றும் கமலேஷ் ஆகியோர் ராணுவ முகாமில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







