பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பன்வாரிலால் புரோஹித் இதற்கு முன்பு தமிழ்நாடு, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர். முன்னதாக, கடந்த ஆண்டு ஆளுநருக்கெதிராக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவி என்பதை உணர்ந்து, அரசியலமைப்பு சட்டங்களை மீறி செயல்படக்கூடாது’ என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







