பஞ்சாப் மாநில எல்லை வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் அத்துமீறல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். போதைபொருள் கடத்துவது, ட்ரோன் மூலம் வெடிப்பொருட்கள் கடத்துவது போன்றவை அடிக்கடி நிகழும். தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க எல்லை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் எல்லையை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேர் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை தார்ன்தரன் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து உள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பஞ்சாப் மாநில டிஜிபி செய்தியாளர்களிடம் கூறுகையில், சந்தேகத்திற்குரிய வகையில் கைதான 2 பேரும் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவி, பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்த முயன்றுள்ளனர். அவர்கள் இருவரும் குர்வீந்தர் சிங் மற்றும் சந்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 35 கிராம் ஹெராயின் என்ற போதை பொருள், தோட்டாக்கள் நிரம்பிய 2 கைத்துப்பாக்கிகள், 2 தோட்டா உறைகள், 100 கிராம் ஓபியம் வகை போதை பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது. சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், இதுதவிர வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் ஊடுருவியுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.