சாலையோரத்தில் நின்ற இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளருடன் கொக்கிப் போட்டு தூக்கிய சம்பவத்தில் ஈடுபட போக்குவரத்து காவலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது நானா பெத் பகுதி. இங்கு வாகன நிறுத்தம் இல்லாத பகுதியில் ஏராளமானோர் இரு சக்கரவாகனங்களை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதை அடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொக்கி மூலம் தூக்கி வேனில் நிறுத்தும் பணியில் போலீசாரும் அதற்கான ஒப்பந்த ஊழியர் களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை கொக்கி மூலம் தூக்கும் போது, வாகனத்துக்கு சொந்தக்காரர் வேகமாக ஓடி வந்தார்.
வண்டியைத் தூக்க விடமாட்டேன் என்று கூறி, இரு சக்கர வாகனத்தில் ஏறினார். போலீஸ் காரர், அதில் இருந்து இறங்குமாறு அவரிடம் கூறினார். அவர் மறுத்ததால், ஒப்பந்த ஊழியர் அப்படியே தூக்கினார். இதை சிலர் செல்போனில் வீடியோவாகப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட் டனர். அது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ராகுல் கூறும்போது, ஒப்பந்த ஊழியர்கள் அப்படி தூக்கி விட்டனர். அந்த வாகன ஓட்டி மன்னிப்பு கேட்டு, விதியை மீறி வாகனத்தை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தினார். இந்தச் சம்பவத்த்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றார்.








