புதுச்சேரி: ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.…

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காளப்பட்டை அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ளது. இது புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது வகுப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. தொற்று குறைந்துள்ளதால் கல்லூரி தற்போது திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடப்பு செமஸ்டருக்கான பாடங்கள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படும் நிலையில், நேரடித் தேர்வு எழுதுவதற்கான தேர்வு அட்டவணையை கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த வாரம் தொடங்க இருந்த நிலையில், இன்று காலை கல்லூரிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரி பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அதை ஏற்க மறுத்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற்பகலுக்கு மேல் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

 

– யுதிஷ்டிரன், மாணவ ஊடகவியலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.