புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜீன் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு; அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது வெகுவாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜீன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிடவும் மாலை 5 மணி வரை தேனீர் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள், சினிமா திரையரங்குகள், அரங்குகள், அரசியல், சமூக செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றிற்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்கள், மதுபான விடுதிகள், சொகுசு விடுதிகள் ஆகியவை 50 சதவிகித நபர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது வரை 1,12,528 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 402 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,684 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







