புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் கூட்டத்தொடரில், பேரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
முதலமைச்சரின் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரியில் அனுமதிக்கப்படுமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“அடுத்த மாநில முடிவை பற்றி நான் விமர்சிக்கவில்லை. ஆனால், தெலங்கானாவில் அனைத்து இடத்திலும் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
கட்டுப்பாட்டோடு மக்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்க்கக்கூடிய நிலையில் இருக்கும்போது கட்டுப்பாடு விதிப்பது தேவையில்லை எனவும், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







