பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் பிரிட்டன் வீரர் டேனியலை எதிர்கொண்டு 21-4, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 4வது தங்க பதக்கமாகும். பிரமோத் பகத் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவராவர்.
அதே நேரத்தில் வெண்கல பதக்கத்துக்கு நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்று அசத்தினார். மனோஜ் சர்க்கார் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் டைசுக்கோ ஃபுஜ்ஹாராவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 4 தங்கம் உட்பட 17 பதக்கங்களுடன் 25வது இடத்தில் உள்ளது. முன்னதாக காலை நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.







